Pattammal alias Mahalakshmi

Thursday, July 15, 2010

Maadu Meikkum Kanne - மாடு மேய்க்கும் கண்ணே...

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. எப்போதும், ஏதாவதொரு கண்ணன் ராமன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு.

கண்ணனைப் பலருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று எண்ணிய போது, அவனை புனிதக் கடவுளாக மட்டும் அல்லாது, குறும்புகளும், குற்றங்களும் செய்யும் பொல்லாக் குழந்தையாக கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது.

கண்ணனை மாடு மேய்ப்பவனாக, யதுகுல பாலகனாகப் பார்த்து ரசிக்கும் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது... ரசிக்க வாருங்கள்.........காட்சியாக

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)